10.16.2009

தவற விட்ட மழை...



பூமி நனைக்க புறப்பட்ட மழைத்துளிகள்..
இன்னும் வந்து சேரவில்லை.
வாசலில் அமர்ந்தபடி யோசித்திருந்தேன்...
மழையை வரவேற்கும் கவிதையொன்றை..

காகிதம் நிறைக்க வார்த்தைகள் கிடைக்காமல்...
வானம் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.
என் வாசல் வழி சென்ற காற்று..
அறிந்திருக்கக்கூடும் என் தேடலை.

காற்று சொல்லி வந்து சேர்ந்தன...
என் வாசம் வராத வார்த்தைகள்.
வரவேற்பதா வேண்டாமா எனும் என் யோசனையை
அலட்சியபடுத்தியபடியே என் முன் அமர்ந்து...
காகிதம் ஏற விருப்பம் தெரிவித்தன.

வார்த்தைகளை அனுப்பிய காற்றே...
காகிதம் பறித்து சென்ற போது...
ஏனோ இறுக்கி பிடிக்க மனமின்றி...
காற்றின் பாதையில் பறக்கவிட்டேன் காகிதத்தை.

என்னை பார்த்தபடி அமர்ந்திருந்த வார்த்தைகளை...
புறக்கணித்து.. உள் சென்று கதவடைத்து விட்டேன்.
நான் தவற விட்ட மழையில் நனைந்து...
கரைந்திருக்ககூடும் காத்திருந்த வார்த்தைகள்...

கருத்துகள் இல்லை: